உத்தரப் பிரதேசத்தில் பூட்டுதல் விதிகளை மீறியதற்காக வாகன உரிமையாளர்களிடம் அபராதம் மூலம் ரூ.5 கோடியே 87 லட்சத்தை காவலர்கள் வசூலித்துள்ளனர்.
இது தொடர்பாக மூத்த காவல் அலுவலர் ஒருவர் கூறுகையில், “மாவட்டங்களில் பூட்டுதல் உத்தரவை கண்டிப்பாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பூட்டுதல் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத 42 ஆயிரத்து 359 மீறல்காரர்கள் மீது சட்டத்தை மீறியதாக 13 ஆயிரத்து 208 எஃப்.ஐ.ஆர்களை காவலர்கள் பதிந்துள்ளனர். இந்தக் காலக்கட்டத்தில் மாநிலத்தில் 1.39 கோடி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது.
31 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.5 கோடியே 87 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இரு வகையான சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அதன்படி பூட்டுதல் உத்தரவை மீறியவர்கள் மீது ஐபிசி 188ஆவது பிரிவின்படியும், அத்தியாவசியப் பொருட்களை பதுக்கியவர்கள் மீது பதுக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் 426 நபர்கள் மீது 344 எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளது என்றார்.
கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நெருக்கடி காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.