உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, துபேவை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், துபேவின் சகோதரரான தீப் பிரகாஷ் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பிரகாஷின் மனைவி, மகள் ஆகியோரும் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். துபேயின் தாயிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் குண்டர்கள் ஆட்சிக்கு இந்தச் சம்பவம் மேலும் ஒரு உதாரணம். காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களின் நிலை என்ன? " என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் எட்டு காவலர்கள் சுட்டுக்கொலை