உத்தரப் பிரதேசம், மௌ சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் முக்தர் அன்சாரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர் பாஜக தலைவர் கிருஷ்ணானந்த் ராய் கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடையவராகக் கருதப்படுபவர் ஆவார்.
இந்நிலையில் இவரது இரண்டு மகன்களான அப்பாஸ் அன்சாரி, உமர் அன்சாரி இருவரும் சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்து துப்பு கொடுக்கும் நபர்களுக்கு உத்தரப் பிரதேச காவல் துறை சார்பாக 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாஸ் அன்சாரி சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதும், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாள்களுக்கு முன்னதாக காசிப்பூர் காவல் துறையினர், நிலங்களை அபகரித்தல், மோசடி செய்தல் மற்றும் பிற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக முக்தரின் மனைவி அஃப்ஷா அன்சாரி, அவரது சகோதரர்கள் ஷார்ஜில் ராஜா, அன்வர் ஷெஜாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
லக்னோ காவல் ஆணையர் சுஜித் பாண்டே இது குறித்து தெரிவிக்கையில், ”மேற்கூறிய குற்றச் சம்பவங்களில் அப்பாஸ், உமர் இருவருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிகிறது.
தலிபாக் பகுதியில் அப்பாஸ் அன்சாரிக்கு சொந்தமான, ஆடம்பரமான இரண்டு கட்டடங்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி மாநில அரசால் இடிக்கப்பட்டன. பிணையில் வெளிவர முடியாத வகையில் இருவருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்தது.
இதற்கிடையில், தற்போது பஞ்சாப்பிலுள்ள ரோப்பர் சிறையில் இருக்கும் முக்தர் அன்சாரியை உத்தரப் பிரதேசத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் காவல் துறை மேற்கொண்டு வருகிறது.
மாநில அரசு ஏற்கனவே முக்தர் அன்சாரியின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது. ஆண்டுக்கு 48 கோடி ரூபாய் வருமானமும் நிறுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வாரணாசி, காசிப்பூர், மௌ, ஜான்பூர் ஆகிய இடங்களில் உள்ள அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது அழிக்கப்பட்டுள்ளன எனக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.