உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், செவ்வாய்க்கிழமை ரூ. 225.39 கோடியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டப் பயனாளிகளுக்கு நேரடி வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் மாற்றினார்.
சஹரன்பூர், கோரக்பூர், வாரணாசி, கண்ணாஜ், ஹார்டோய் மாவட்டங்களின் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் இடையே காணொலி மூலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாடினார். அப்போது, தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், தங்களது மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாக அலுவலர்கள் அவரிடம் தெரிவித்தனர்.
"மே மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 50 லட்சம் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதைக் குறிக்கோளாக கொள்ளவேண்டும். அதற்கு அரசு அலுவலர்கள் தங்களது கடமையை நேர்மையாகச் செய்யவேண்டும். ஊரடங்கினால், பல்வேறு மாநிலங்களிலிருந்து திரும்பிய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை உறுதி செய்யவேண்டும்" என முதலமைச்சர் மாவட்ட நிர்வாக அலுவலர்களிடம் தெரிவித்தார்.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்ய, ஊரக வளர்ச்சித்துறை செயல்படுவதில் தான், தான் மகிழ்ச்சியடைவதாக அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே 7ஆம் தேதி ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொழில் வழங்குவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்,யோகி ஆதித்யநாத்.
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களை தேசிய ஊரக வளர்ச்சித் திட்டம், சிறு, குறு தொழில்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் பணிகள் உள்ளிட்டவற்றில் இணைத்து வேலை வழங்கவேண்டும் என யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வெளிநாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை