கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊரடங்கை அமலுக்குக் கொண்டுவந்தது. இதனால், மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.
இதனிடையே, கரோனா ஊரடங்கை நான்கு கட்டங்களில் படிப்படியாகத் தளர்த்துவது குறித்து மத்திய அரசு கடந்த மாதம் 31ஆம் தேதி அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று (ஜூன் 8) முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குப் பிறகு இன்று செயல்பாட்டிற்கு வந்தன.
அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள பிரசித்திப்பெற்ற கோரக்பூர் சிவாலயம் அரசு அனுமதியுடன் இன்று பக்தர்களை வரவேற்றது.
இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அக்கோயிலுக்குச் சென்று பக்தர்களுடன் தகுந்த இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்து வழிபட்டுச் சென்றார்.
இதையும் படிங்க : 75 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்