உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். இதில் சிறுமியின் இரண்டு அத்தைகள் உயிரிழந்தனர். மேலும், காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் படுகாயமடைந்தார்.
விபத்திற்குள்ளானவர்கள் லக்னோவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களின் மருத்துவச்செலவு உத்திரப்பிரதேச அரசால் வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இன்று வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, சிறுமியும் வழக்கறிஞரும் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவர்களின் அறிக்கைகள் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், உன்னாவ் பாலியல் வன்கொடுமை தொடர்பான அனைத்து வழக்குகளையும் இரண்டு வாரங்களுக்குள் முடிக்கவேண்டும் என மத்திய புலனாய்வு அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ளனர்.