உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய வழக்கில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
2017ஆம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த சிறுமி, குல்தீப் சிங் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரளித்தார். முதலில் இவரின் குற்றச்சாட்டை ஏற்பதில் தாமதம் காட்டிய காவல்துறை, பல்வேறு அழுத்தங்களுக்குப்பின் வழக்குப்பதிவு செய்தது. இவரின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். காவலில் இருக்கும்போது அவர் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக டெல்லி சென்ற இளம்பெண்ணின் கார் சந்தேகத்துக்குரிய வகையில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் கொலை முயற்சி என குற்றச்சாட்டு எழவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டு பெண்ணுக்கு உரிய பாதுகாப்பும் சிகிச்சையும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், குல்தீப் சிங் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான சஷி சிங் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து தண்டனை குறித்த விவரங்களை நீதிமன்றம் இன்று வெளியிட்டது. செங்காருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 25 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அபராத தொகையில் ரூபாய் 10 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.