கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சல்காரே தாலுகா பகுதியில் ஜோடிசிக்கனஹேலி என்ற கிராமம் உள்ளது. இன்று காலை, அப்பகுதி அருகே பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று விபத்துக்குள்ளானது. இதைக் கண்டு பரபரப்படைந்த கிராமத்தினர் விமானம் விழுந்த பகுதிக்கு விரைந்தனர்.
விமான விபத்தில் யாரேனும் சிக்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற மக்கள் ஐயத்துடன் விபத்து பகுதிக்குச் சென்றனர். பின்னர்தான் அது ஆளில்லா விமானம் என மக்களுக்கு தெரியவந்துள்ளது. ஆளில்லா விமானம் மத்திய அரசை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது என முதன்மைத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. டபஸ் (TAPAS) ரக விமானமான அது, சோதனையோட்டத்தின்போது விழுந்து நொறுங்கியுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
விவரமறிந்ததும் அரசு, பாதுகாப்பு அலுவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், உடைந்த விமான பாகத்துடன் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர்.