டெல்லி: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நரேந்திரசிங் தோமர் ஆகியோர் பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர். டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்களை அவமதிப்பதுபோல் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
டெல்லி-ஹரியானா எல்லையான சிங்குவில் பாரதிய கிஷான் சங்கத்தின் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுர்ஜித் சிங் பால் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்தப் பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. அவர்கள் எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை, மாறாக நிபந்தனைகள் விதிக்கின்றனர்.
விவசாயிகள் தங்களின் தர்ணா போராட்டத்தை கைவிட்டுவிட்டு புராரி பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். புராரி பூங்காவை திறந்தவெளிச் சிறைச்சாலையாக பயன்படுத்தி விவசாயிகளை அடைக்க அவர்கள் நினைத்துவிட்டார்கள். நாங்கள் ஒருபோதும் புராரி பூங்காவிற்கு செல்ல மாட்டோம்” என்றார். மற்றொரு விவசாயி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நரேந்திரசிங் தோமர் ஆகியோர் பாஜக தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், விவசாய சங்கங்களுடன் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு மத்திய அரச தயாராக உள்ளது என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கூறினார்.
இதையும் படிங்க: “வேளாண் சட்டங்களை மாற்றியமைத்திடுக”- அசோக் கெலாட் பிரமருக்கு கடிதம்!