அரசு வேலையாக டெல்லி சென்றிருந்த, மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா விமானம் மூலம் நேற்று பெங்களூரு திரும்பினார்.
ஆனால், தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் விமான நிலையத்திலிருந்து அரசு வாகனத்தில் ஏறி, அடுத்து வேலைக்குக் கிளம்பிவிட்டார்.
வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் கர்நாடகா வரும் நபர்களைக் கண்டிப்பாகத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு முரணாக அமைந்துள்ள அமைச்சர் சதானந்த கவுடாவின் செயல் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
ஏராளமானோர் சதானந்த கவுடாவுக்கு எதிராக சமூக வலைதளத்தில் கண்டனக் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து சதானந்த கவுடாவிடம் கேட்டபொழுது, "அரசு வேலையில் ஈடுபட்டுள்ள நபர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியத் தேவையில்லை. என் கைபேசியில் உள்ள ஆரோக்கிய சேது செயலிதான், தான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்றே சொல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சருக்குச் சாதகமாக கர்நாடக அரசும் கருத்துத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மினிகாய் தீவு அருகே கடலில் தத்தளித்தவர்கள் மீட்பு