மத்திய அமைச்சரும் ஆர்.பி.ஐ கட்சித் தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக உள்ளார்.
இவரது ஆர்.பி.ஐ கட்சியில் நடிகை பாயல் கோஷ் நேற்று தன்னை இணைத்துக்கொண்டார். இந்த இணைப்பு விழாவுக்குப் பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்றார் அத்வாலே. கரோனா அறிகுறிகளுடன் இருந்த அத்வாலேக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அதன் முடிவுகள் இன்று (அக்.27) வெளியானது. அதில் அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்வாலேவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏற்பட்ட தொடக்க காலத்தில் கரோனாவுக்கு எதிராக தெருவில் இறங்கி "கரோனா கோ, கரோனா கோ" என போராட்டக் குரலில் முழக்கமிட்டு இவர் பாடல் பாடியது வைரலானது. இதுபோன்ற வைரல் கருத்துகளை அவ்வப்போது தெரிவிப்பவர் அத்வாலே என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "சைனீஸ் உணவுக்கு நோ" - மத்திய அமைச்சரின் அடடே கோரிக்கையால் மிரண்ட நெட்டிசன்ஸ்