பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் பாட்னாவில் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், பிகார் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் உயர்ந்தது.
கடந்த 15 ஆண்டுகளில், மூன்று விழுக்காட்டிலிருந்த ஜிடிபி 11.3 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆனால், இது லாலுவின் ஆட்சியில் நடைபெறவில்லை. சிறப்பான நிர்வாகத்தை மக்களுக்கு அளிப்பதே எங்கள் அரசின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெரிய அளவில் கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்ட பின்னர், அனைவருக்கும் அது இலவசமாக வழங்கப்படும்.
தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிதிஷ் குமார்தான் முதலமைச்சர். அவரின் ஆட்சியின் கீழ், முன்மாதிரியான வளர்ச்சி அடைந்த மாநிலமாக பிகார் மாறும். பிகார் மக்கள் அரசியல் ஞானம் உள்ளவர்கள். ஒரு கட்சி வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவார்களா? நிறைவேற்றமாட்டார்களா? என்பதை மக்கள் அறிவார்கள்" என்றார்.