யுனெஸ்கோ அமைப்பானது உலகின் மிகவும் பழைமையான நகரங்கள், பாரம்பரிய சின்னங்களையும் புராதான பட்டியலில் இணைத்துவருகிறது. அந்த வகையில் புதுச்சேரியை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகர அந்தஸ்து பெற வைக்க முதற்கட்ட முன்னோட்ட ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை செயலர் அஸ்வின் குமார், புதுச்சேரி பொறியாளர்கள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பலதரப்பட்ட கருத்துகள் கேட்கப்பட்டன.
இது குறித்து யுனெஸ்கோ ஆறு நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் எரிக், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வின் குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அஸ்வின், இந்தியாவில் 38 பழைமைவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் உள்ளன என்றும் இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தின் மீது மக்கள் எவ்வளவு மரியாதை வைத்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது என்றார். மேலும், யுனெஸ்கோவில் பழைமை வாய்ந்த இடமாக புதுச்சேரியில் குறிப்பிட்ட கட்டடம் அல்லது இடங்கள் இடம்பெற என்ன மாதிரியான பிரச்னைகள் உள்ளன என்பது குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது என்றார்.
மேலும் அரசு பழைமை வாய்ந்த கட்டடங்களைப் பாதுகாக்க கடந்த காலங்களில் தனியார் கட்டடங்களுக்கும் புதுச்சேரியில் மானியம் அளிக்கப்பட்டதாக தெரிவித்த தலைமைச் செயலர், அது சரியான முயற்சியாக இல்லாததால் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறக்குமதி வரி உயர்வு எதற்கு? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்