டெல்லியில் ஜனவரி 26ஆம் தேதி ஆண்டுதோறும் நாட்டின் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அப்போது குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில் முப்படை அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்கள். 2019ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தச் சூழ்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த நவம்பர் 27ஆம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக அழைப்புவிடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி உள்ள பிரிட்டன் தற்போது Transition Period எனப்படும் வெளியேறும் காலகட்டத்தில் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய வர்த்தக கொள்கையை வரையறுக்கும் முக்கிய பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இதனால் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்துகொள்வது குறித்து குழப்பம் நிலவியது.
இந்நிலையில், பிரதமர் மோடி விடுத்திருந்த அழைப்பை ஏற்று குடியரசு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜனவரி மாதம் போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளார் என்று அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, பிரிட்டனில் அடுத்தாண்டு நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அழைப்புவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'ஜனநாயகம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது' - ஜோ பைடன்