நாட்டில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. குறிப்பாக, தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு மட்டும் நடத்தப்படாமல் இருந்தது.
இதுதொடர்பாக பல்வேறு தரப்பில் விவாதங்கள் நடைபெற்றுவந்த நிலையில், தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், யுஜிசி வழிகாட்டு நெறிமுறைகள் தன்னிச்சையாக இருப்பதாகவும், கரோனா காலத்தில் மாணவர்களைத் தேர்வெழுத வருமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறி பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரணையின்போது, யுஜிசி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தற்போது யுஜிசி பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அதில், ”இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை. அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தேர்வு நடத்திட வேண்டும். தற்போது, இறுதித் தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். செப்டம்பரில் தேர்வெழுத முடியாத மாணவர்களுக்கு, வேறு ஒரு தேதியில் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.