மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸூம், துணை முதலமைச்சராக பதவியேற்ற அஜித் பவாரும் நேற்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தங்களுக்கு ஆதரவாக உள்ள 166 எம்எல்ஏக்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை, அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக நியமிப்பதாகவும் 28ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு சிவாஜி பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதாகவும் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டணிக்கு 'மகா விகாஸ் அகாதி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்கு மூன்று கட்சிகளின் எம்எல்ஏக்களும் ஒருமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த காளிதாஸ் கோலம்பகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எத்தனையோ பிரச்னை இருக்கு ... இப்போ இ-சிகரெட் தடை மசோதா தேவையா? - செந்தில்குமார்