டெல்லி: சட்டக் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவனும், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவனும் நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், தேசிய தேர்வு முகமையின் முடிவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், “மனித வாழ்வை விட எதுவும் முக்கியமில்லை” என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவில் மேலும் கூறுகையில், “மனித வாழ்க்கையில் மறக்க முடியாத துயர நினைவுகளை கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திவருகிறது. ஆயிரக்கணக்கானோர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். உலகம் முழுக்க பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் கரோனா வைரஸூடன் போராடிவருகின்றனர்.
மக்களின் உயிரை காப்பாற்றும் நோக்கத்தில் நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்குகின்றன.
அனைத்து இந்தியர்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.
அதே வேளையில், மாணவர்களுக்கு பேரதிர்ச்சி தரும் வகையில், நீட் தேர்வை அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் பெரும்பாலும் 17 வயது முதல் 18 வயதுடைய பதின்ம இளைஞர்கள், இளைஞிகள் ஆவார்கள்.
ஆகவே, கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை தவிர்க்க வேண்டும். நாட்டில் மற்ற தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சில தேர்வுகள் நடைபெறவில்லை.
எனவே குழந்தைகள், பதின்ம வயது இளைஞர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த விஷயத்தில் தலையிட்டு நீட் தேர்வை கைவிட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தனர்.
மேலும், “தற்போது நீட் தேர்வை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதிகள் 21ஆம் ஷரத்துக்கு எதிரானது என்றும் மாணவர்கள் தங்கள் கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நீட் தேர்வை கைவிடக் கோரி பாஜக ஆளாத மாநிலங்களான, சத்தீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்கள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
முன்னதாக நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு நியாயமற்றது'- கிரேட்டா தன்பெர்க்