ஒடிசா மாநிலம், காலஹண்டி மாவட்டம், பஹண்டரங்கி சிர்க்கி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் சில மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக காவல் துறைக்கு ரகசியத்தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் நேற்று (புதன்கிழமை) ஒடிசா காவல் துறையின் சிறப்புப் படையினர், அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
அப்போது, வனப்பகுதியில் பதுங்கிருந்த மாவோயிஸ்ட் திடீரென காவல் துறையினரை நோக்கி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தப் பயங்கர தாக்குதலில் 2 சிறப்புப் படை வீரர்களும், 5 மாவோயிஸ்ட்களும் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காலஹண்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கங்காதர், "இந்தத் தாக்குதலில் ஒடிசா காவல் துறையின் சிறப்புப் படையில் பணிபுரிந்து வந்த மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த சுதீர் குமார் டுடு(28), அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த டெபாசிஸ் சேத்தி ஆகிய இருவரும் வீர மரணம் அடைந்தனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்களில் நான்கு பெண்கள் அடங்கும். இவர்கள் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்)இன் பன்சாதரா-கும்சர்-நாகபாலிடிவிஷனைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அப்பகுதியிலிருந்து ஆறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
முன்னதாக,கடந்த ஜூலை 5ஆம் தேதி காந்தமால் மாவட்டத்தில் உள்ள சிர்லா ரிசர்வ் வனப்பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து மாவோயிஸ்ட்கள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.