கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதையடுத்து மத்திய அரசின் மருத்துவக் குழுவினர் கேரளாவில் முகாமிட்டு நோய்த் தடுப்பு நடவடிக்கையில் இறங்கினர்.
மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர், அவரது நண்பர்கள் இரண்டு பேர், இளைஞருக்கு சிகிச்சை அளித்த மூன்று செவிலியர் என மொத்தமாக 5 பேர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இதுதவிர மேலும் இந்த வைரஸ் தாக்கம் இருப்பதாக கருதி 314 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தற்போது மேலும் இருவருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் உள்ளதால் அவர்களும் தீவிர கண்காணிப்பில் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நிபாவால் பாதிப்பு இருப்பதாக கருதப்படும் ஏழு பேரும் எர்ணாகுளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு பேரின் ரத்த மாதிரிகள் புனே வைரஸ் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு முடிவுக்காக காத்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.