பாகிஸ்தான் எல்லையிலுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் என்ற பகுதிக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து இரண்டு சிறுமிகள் நேற்று தவறுதலாக நுழைந்துவிட்டனர். அவர்களை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் வைத்தனர்,
இருவரும் லைபா சுபைர் (17) மற்றும் சனா ஜுபைர் (13) ஆகிய இரு சகோதரிகள் என்பதும் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள தெஹ்ஸில் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரும் உள்ளூர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அவர்கள் பாகிஸ்தான் அலுவலர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அச்சிறுமிகளுக்கு இனிப்புகளையும், பரிசுகளையும் இந்திய வீரர்கள் வழங்கினர்.
பூஞ்ச் உள்ளிட்ட எல்லையிலுள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இருப்பினும், இதுபோல வழிதவறி அண்டை நாட்டிற்குள் தெரியாமல் நுழையும் நபர்களை இரு நாடுகளும் பாதுகாப்பாக அவர்களின் சொந்த நாட்டிற்குத் திரும்பி அனுப்புகின்றன.
எல்லைக் கட்டுப்பாடு கோட்டிற்கு அருகே வசிக்கும் மக்கள் தவறுதலாக அண்டை நாட்டிற்குள் நுழைந்துவிடும் சம்பவம் அடிக்கடி நடைபெறும். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய ஏற்படுத்தப்பட்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மணப்பெண்ணுக்குக் கரோனா... திருமண மண்டபமாக மாறிய கோவிட் மையம்!