பெண் குழந்தைகள் வீட்டில் இருந்து வீட்டு வேலைகளை மட்டும் செய்தான் போதுமானது என்பது போன்ற கட்டிப்பெட்டித்தனங்கள் இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களில் இருக்கிறது. இந்நிலையில், அந்த மூடநம்பிக்கைகளையும், வெற்றுவிதிகளையும் கேரளாவைச் சேர்ந்த ஷில்பா, நந்தனா என்ற இரண்டு சகோதரிகள் உடைத்துள்ளனர்.
ஷில்பா பிபிபி பயின்றுவரும் மாணவி. நந்தனா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார். இவர்கள் இருவரும் காலையில் எழுந்ததும் இயல்பாகப் புறப்பட்டு தங்களது கடைக்குச் சென்று மீன் விற்பனைச் செய்துவருகின்றனர். அங்கு மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் சிறு சுணக்கமும் இன்றி பேசுவதோடு, மீனை தாங்களே வெட்டியும் கொடுக்கின்றனர்.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இரும்புபாலம் பகுதியைச் சேர்ந்தவர், வெட்டிக்கால் மனோஜ். இவர் மீன் விற்றுதான் அவரது குடும்பத்தை நடத்திவந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இவருக்கு எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது வருமானத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பம் ஸ்தம்பித்துப்போனது. இந்த இக்கட்டான சூழலில், தனது தந்தைக்கு அவரது மகள்கள் ஷில்பாவும், நந்தனாவும் உதவ நினைத்தனர்.
இந்த விஷயத்தைத் தங்கள் தந்தையிடம் தெரிவிக்கவே அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, இருவரும் தொடர்ச்சியாக கடைக்குச் சென்று மீன் வியாபாரம் செய்ய தொடங்கினர். ஆனால், இரண்டு இளம்பெண்கள் கடைக்குச் சென்று மீன் வியாபாரம் செய்வது உள்ளூர்வாசிகளிடம் பல விமர்சனங்களைப் பெற்றது.
இருந்தபோதும், ஷில்பாவின் குடும்பம் அது குறித்து எவ்வித சஞ்சலமும் அடையவில்லை. சமூகம் ஆயிரம் சொன்னாலும், நமக்கானவற்றை நாம் தானே தேடிக் கொள்ள வேண்டும். ஷில்பாவையும், அவரது சகோதரி நந்தனாவையும் விமர்சிப்பவர்களால் ஒரு வேளை உணவுக்குக்கூட வழி செய்யமுடியாது என்பதுதானே உண்மை. அதை இவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இதையும் படிங்க: 'முகக்கவசம் விற்ற காசுதான் என் குடும்பத்தை இயக்குகிறது’ - பள்ளி மாணவன் நவீன்