கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 15 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகள் திண்டாடிவருகின்றன.
இந்தியாவில் தற்போது வரை வைரஸால் 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
இதனிடையே ஈரான், எகிப்து, ஸ்வீடன் நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் மூன்று இந்தியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதில் ஸ்வீடனைச் சேர்ந்த தமிழ்நாட்டு இளைஞருக்கும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் லடாக் பகுதியைச் சேர்ந்த இந்தியர் ஈரானில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. எகிப்தில் 45 வயதுடைய இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் 276 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளிவிவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி ஈரானில் 255 இந்தியர்களுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 12 பேரும், இத்தாலியில் ஐந்து பேரும், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த நாடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏன்?