ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காரில் வெடிகுண்டுகளைப் பதுக்கி தாக்குதலில் ஈடுபட முயன்ற பயங்கரவாதிகளின் சதித்திட்டம் மத்திய ஆயுத காவல்படை, காவல் துறையினர் எடுத்த துரித நடவடிக்கையால் நேற்று முன்தினம் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில், சோபியானில் வசித்துவரும் ஹிதாயத்துல்லா மாலிக் வெடிகுண்டுகளை காரில் நிரப்பி வைத்திருந்தார். இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு என்ன காரணம், வெடிகுண்டின் தன்மை ஆகியவற்றை காவல் துறையினர் விசாரித்துவந்தனர்.
காவல்துறையினர் தகவலின்படி, இவர் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். பாதுகாப்பு படையினரைக் கொல்வதற்காக அவரது காரில் 40-45 கிலோ வெடிபொருள்களை கொண்டு சென்றுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர் காரில் வெடிபொருள்களை கொண்டு செல்வது தொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும், மத்திய ஆயுத காவல்படையினருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த மிகப்பெரும் வெடிவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வெடிவிபத்து நிகழ்ந்திருந்தால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு நிகராக இருந்திருக்க வாய்ப்புள்ளது என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பயங்கர தாக்குதல் நடத்த முயன்ற ஹிதாயத்துல்லா மாலிக்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: புல்வாமா கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணமானவர் அடையாளம் காணப்பட்டார்