ஆந்திர பிரதேச பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வி. விஜயா சாய் ரெட்டி குறித்து ட்வீட் செய்யப்பட்டிருந்தது. அதில், "நீங்கள் ஊழல் சிறைப் பறவையாகவும் டெல்லியில் தரகராகவும் மக்கள் மத்தியில் அறியப்படுகிறீர்கள். உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள்.
கண்ணா லக்ஷ்மி நாராயணா மீதான உங்களுடைய குற்றச்சாட்டு தரக்குறைவாகவும் முட்டாள்தனமான உளறலாகவும் உள்ளன. உங்கள் இரட்டை வேடம் குறித்து எங்களுக்குத் தெரியும். தேவையற்று இதுபோன்று உளறாமல் இருங்கள்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்தத் தரக்குறைவான விமர்சனத்திற்கு அவர் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்கநேரிடும் எனவும் அந்த ட்விட்டர் பதிவில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வி. விஜயா சாய் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அம்மாநில பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மி நாராயணா வெளியிட்ட ட்வீட்டில், "ஆந்திர மாநிலத்தை தெலுங்கு தேசம் கட்சியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் சுரண்டிவருகின்றன. என் மீதான விஜய் சாய் ரெட்டியின் குற்றச்சாட்டுக்கு அவர் மீது நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மி நாராயணா ஊழல் செய்ததாக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வி. விஜயா சாய் ரெட்டி நேற்று குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தைப் போர் மூண்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கில் சுரங்கப்பாதை அமைத்த நக்சல்கள்