உலகளவில் ட்விட்டரில் சட்டத்திற்கு விரோதமாகவும், தவிர்க்கப்பட வேண்டிய பல குறிப்புகளும், வீடியோக்களும், புகைப்படங்களும் பதியப்பட்டு வருகின்றன. மேலும் பல மில்லியன் அக்கவுண்டுகளும் ஹேக் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்திய நாடாளுமன்ற தொழில்நுட்ப பிரிவு, பா.ஜ., எம்.பி., அனுராக் தாக்கூர் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழு இம்மாத தொடக்கத்தில் ட்விட்டர் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் சம்மன் அனுப்பியது. அதில், நாடாளுமன்ற குழு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் ஆஜராக வேண்டும் என்றும், அவருடன் பிரதிநிதி ஒருவரையும் அழைத்து வரலாம் எனவும் கூறப்பட்டது.
ஆஜராவதற்கு கடந்த 7-ம் தேதி வரை கெடு விதித்த இந்த குழு, ட்விட்டர் சிஇஓ ஆஜராவதற்கு வசதியாக தேதியை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ட்விட்டர் அதிகாரிகளுக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என ட்விட்டர் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, ட்விட்டர் நிறுவனத்தை சேர்ந்த விஜய் கடே, நாடாளுமன்ற குழுவிற்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவை பொறுத்தவரையில் எங்களின் கணக்குகள், விதிமுறைகளை காண்பிக்க முடியாது எனக்கூறி உள்ளார்.
மேலும் அமெரிக்க, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய யூனியனை தொடர்ந்து, இந்தியாவும் ட்விட்டர் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.