புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே, குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், அந்தப் போராட்டத்தை தூண்டும் விதமான போலி செய்திகளை வெளியிட்ட 250க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
முன்னதாக, போராட்டத்தை தூண்டும் விதமான கருத்துகளை பதிவிட்டவர்களின் கணக்கை முடக்கும்படி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதுகுறித்து ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ட்விட்டர் எப்படி செயல்பட வேண்டும் என பல நாடுகளில் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
ட்விட்டரின் சேவையை அனைவருக்கும் எடுத்து செல்ல தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது. அதே சமயத்தில், சம்பந்தப்பட்ட துறைகளிலிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில், குறிப்பிட்ட கருத்துகளை பதிவிட்டவர்களின் கணக்கை முடக்குவது அவசியமாகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.