ஜி-7 உச்சி மாநாட்டை அமெரிக்காவில் நடத்த அந்நாட்டு அதிபர் டர்ம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்த காரணத்தால், ஜி-7 நாடுகளின் குழுவிலிருந்து ரஷ்யா நீக்கப்பட்டது.
இருப்பினும், ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் முடிந்தவுடன் இதுகுறித்த முடிவை எடுப்பேன். கரோனா பெருந்தொற்று காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டம் நடத்தப்படலாம். தேர்தலுக்கு பின்பு ஜி-7 மாநாட்டை நடத்துவதே முறையாக இருக்கும் என உயர் மட்ட அலுவலர்களிடம் தெரிவித்துள்ளேன். முக்கியமான கூட்டம் என்பதால் முடிவை எடுக்க அனைவருக்கும் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, தென் கொரியா, இந்தியாவையும் அழைக்க உள்ளோம்" என்றார். ஜூன் மாதம், ஜி-7 நாடுகளின் குழுவில் ரஷ்யாவை மீண்டும் இணைக்கக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.
கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஜி-7 நாடுகளின் குழுவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 'வெல்கம் பேக்' - சச்சின் பைலட்டை வரவேற்கும் காங்கிரஸ் தலைவர்கள்!