அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப் அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்திற்கு வருகைதரவுள்ளார். அதன்பின்னர், அண்ணல் காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை ட்ரம்பும், மோடியும் பார்வையிடவுள்ளனர்.
குஜாரத்தில் உள்ள ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்லும் 22 கி.மீ. பாதையில் பிரமாண்ட சாலைப் பேரணி ஒன்றை பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பேரணிக்கு இந்தியாவின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும்விதமாக 'வேற்றுமையில் ஒற்றுமை' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
குஜராத் பயணத்திற்குப்பின் உத்தரப் பிரதேச மாநிலம் செல்லும் ட்ரம்ப், அங்குள்ள தாஜ்மஹாலை ட்ரம்ப் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குஜராத்தின் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், "எங்கள் மாநிலத்திற்கு அமெரிக்க அதிபர் வருகைதருவது பெருமையளிக்கிறது. இரு நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பானவிதத்தில் நடைபெற்றுவருகின்றன. மாநில அரசு தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் தருகிறது" எனத் தெரிவித்தார்.
வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரவுள்ளார்.
இதையும் படிங்க: 'இன்னும் மூன்றாண்டுகளில் ராமர் கோயில் தயார்' - ராம் மந்திர் அறக்கட்டளை