ராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று சரக்கு ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு வந்தது. இந்நிலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த டெல்லி போக்குவரத்து காவல் துறையின் அமலாக்கப்பிரிவினர் ராஜஸ்தான் லாரியை வழிமறித்துள்ளனர். அப்போது லாரியை சோதனையிட்டபோது அதில் அதிக பாரம் ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர், அவருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த லாரி ஓட்டுநர் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் செலுத்தி அதற்கான ரசீதைப் பெற்றுக்கொண்டார்.
மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்து நாடு முழுவதும் கடும் கெடுபிடி நிலவும் சூழலில் லாரி ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பிற ஓட்டுநர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.