சொந்த ஊரிலிருந்து பிற ஊர்களுக்கு பிழைப்பு தேடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும் மீண்டும் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஆயுத்தமாகினர். இதற்காக, காட்டுப் பாதைகளில் நடைபயணம் மேற்கொள்வது, லாரி உள்ளிட்ட வாகனங்களில் கும்பலாகப் பயணிப்பது என முடிவுசெய்து புறப்பட்டனர்.
இதில் பெரும்பாலான பயணங்கள் இலக்கை எட்டவில்லை என்பதே இயலாமையின் உச்சக்கட்டம். பசி, தாகம், விபத்து என இயற்கையும், வாழ்க்கையும் அவர்களைப் பந்தாடியதில் உயிரிழப்புகள் அதிகரித்தன. அந்த வகையில், மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசம் சென்று கொண்டிருந்த 60 தொழிலாளர்கள் வந்த ட்ரக் விபத்துள்ளானது. உத்தரப் பிரதேச மாநிலம் பாரியாச் மாவட்டத்தில் நடந்த இவ்விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 42 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து, காவல் கண்காணிப்பாளர் அஜய் பிரதாப், “ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த ட்ரக் மின்கம்பம் மீது மோதி, கவிழ்ந்தது. தகவலறிந்ததும் விரைந்து வந்து தொழிலாளிகளை மீட்டுச் சிகிச்சைக்கு அனுப்பினோம். தொழிலாளர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 'வீட்டை காலி செய்!' - செவிலிக்கு மிரட்டல்