சைபர் தாக்குதல் என்பது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிநபர்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெற்றன. ஆனால், இப்போது பெருநிறுவனங்களும், சில சமயங்களில் அரசு இயந்திரங்களும்கூட இந்த சைபர் தாக்குதல்களில் சிக்கிக்கொள்கின்றன.
இந்நிலையில், தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான குயிக் ஹீல் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு பரிவான செக்ரைட்(Seqrite), இந்தியாவிலுள்ள கூட்டுறவு வங்கிகள் மீது சைபர் தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல் மட்டும் வெற்றியடையும் பட்சத்தில், கோடிக்கணக்கான இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக்கர்கள் கையில் சேரும் அபாயம் உள்ளதாகவும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து செக்ரைட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "முதலில் ஹேக்கர்கள் ரிசர்வ் வங்கியிலிருந்தோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்தோ அனுப்பப்படுவது போன்ற ஒரு போலியான மின்னஞ்சலை அனுப்புகின்றனர். அதிலுள்ள zip fileஐ டவுன்லோட் செய்யும்போது நமது கணினி அவர்கள் கட்டுப்பாட்டில் சென்றுவிடுகிறது.
அவர்கள் பரப்பும் இந்த மால்வேர் Java கணினி மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இது அனைத்து வகையான கணினிகளையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதுதவிர இந்த மால்வேரால் ஸ்கீர்ன்ஸாட்களும் எடுக்க முடியும், சுருங்கச் சொன்னால் அந்த zip fileஐ டவுன்லோட் செய்தவுடன் நமது கணினியை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவர் கட்டுப்படுத்தலாம்.
இதில் கிடைக்கும் பல கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டு, அவர்களைத் தனிப்பட்ட முறையில் இந்த ஹேக்கர்கள் ஏமாற்றலாம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பலகோடி மக்களின் தகவல்கள் தற்போது குறிவைக்கப்பட்டுள்ளதால், தேவையற்ற மின்னஞ்சல்களைத் திறப்பது, அதிலுள்ள Attachment-களை டவுன்லோட் செய்வது வேண்டாம் என்றும் செக்ரைட் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுதவிர ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்கக் கணினியின் மென்பொருளை அப்டேட் செய்து வைத்திருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த வகையான சைபர் தாக்குதல் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அனைத்து மாநில காவல் துறையினருக்கும் சிபிஐ தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்!