மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே நேற்று மக்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக ஆதரவளித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் வேளாண் துறை தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து அமளியின்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சபை தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று வேளாண் மசோதா நகலை கிழித்தெறிந்தார். இந்த அமளியால் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டது.
இதனால் மாநிலங்களவை சில மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாநிலங்களவை கூடியபோது, வேளாண் மசோதாக்களை நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். ஆனால் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.
பின்னர் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பின்படி மூன்று வேளாண் மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அவர் ஒப்புதல் வழங்கியதுடன், அவசர சட்டத்திற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் விலை ரூ. 1150... ஆனால்? - ப. சிதம்பரம் கேள்வி