ஆட்சிப் பணியாளர்கள் அரசியல் கட்சிகளில் சேருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிதல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அலுவலர்கள் அரசியல் கட்சிகளில் சேர்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், நிர்வாகத்துறையிலிருந்து வந்து அரசியல் களத்தில் வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் அளவுதான் உள்ளது.
ஆட்சிப் பணியாளர்களில் சிலர் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பல்வேறு காரணங்களால், அவர்கள் தோல்வியும் அடைந்துள்ளனர்.
இந்திய அரசியலில் கொடிகட்டிப் பறந்த ஆட்சிப் பணியாளர்கள்:
மாவட்ட ஆட்சியராக இருந்த அஜித் ஜோகி அரசியலில் சேர முடிவெடுத்தார். 1968ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த அவர், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் அழைப்பில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர், சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
கடந்த 1960ஆம் ஆண்டு முதல் 1984ஆம் ஆண்டு வரை, ஐஏஎஸ் அலுவலராக யஷ்வந்த் சின்ஹா பதவி வகித்தார். 1990-91 காலக்கட்டத்தில் சந்திர சேகர் அமைச்சரவையில் நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர், ஜனதா தளத்திலிருந்து பாஜகவிற்கு கட்சி மாறினார். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதித்துறை, வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்தார்.
கடந்த 1963ஆம் ஆண்டு, ஐஎப்எஸ் அலுவலர் பணியில் சேர்ந்த மணி சங்கர் அய்யர், அரசியலில் சேர்வதற்காக 1989ஆம் ஆண்டு அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். 1991ஆம் ஆண்டு, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை பெட்ரோலியத்துறை அமைச்சராகவும், 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 2008ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை வடகிழக்குப் பகுதி வளர்ச்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
கடந்த 1989ஆம் ஆண்டு, ஐஐடி காரக்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த அரவிந்த் கெஜ்ரிவால், 1992ஆம் ஆண்டு, இந்திய வருவாயத்துறையில் சேர்ந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்த அவருக்கு ரமோன் மாக்சேசே விருது வழங்கப்பட்டது.
கடந்த 1972ஆம் ஆண்டு, நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அலுவலராக கிரண் பேடி பதவி ஏற்றுக் கொண்டார். காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவின்போது இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். 2015ஆம் ஆண்டு, பாஜகவில் இணைந்த அவரை டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். தற்போது, புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக உள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் ஆட்சிப் பணியாளர்கள்
கடந்த டிசம்பர் 1ஆம் தேதி, 1995-ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
2011-ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த கே. அண்ணாமலை, ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். அவருக்கு அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
கே.ரங்கராஜன், 2005-ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருக்கு செயலர் பதவி வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெற்கு சென்னைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
1997-ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ஏ.ஜி.மவுரியா, கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியின் பொதுச் செயலாளரான அவர், 2019 மக்களவைத் தேர்தலில் வடக்கு சென்னை தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
ஏ.எக்ஸ். அலெக்சாண்டர், 1970-ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
1975-ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த நடராஜன், கடந்த 2014ஆம் ஆண்டு, அதிமுகவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
பி.சிவகாமி, 1980-ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2009ஆம் ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியிலிருந்து விலகிய அவர், சமூக சமத்துவப் படை என்ற கட்சியைத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
கடந்த 1999ஆம் ஆண்டு, மூத்த ஐஏஎஸ் அலுவலரான கே.மலைச்சாமி, அதிமுகவில் இணைந்தார். அந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அவர், அதிமுக சார்பாக மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2015ஆம் ஆண்டு, அவர் பாஜகவில் இணைந்தார்.
1971-ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த வி.எஸ்.சந்திரலேகா, தமிழ்நாட்டின் ஜனதா கட்சித் தலைவராக பதவி வகித்தவர். கடந்த 1996ஆம் ஆண்டு, மேயர் தேர்தலில் ஸ்டானுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.