ஊரடங்கால் அவதிப்படும் சரக்கு லாரி போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை என்றால் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதில் பாதிப்பு ஏற்படலாம் என அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (AIMTC) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் குல்தரன் சிங் அத்வால் கூறுகையில், ”வட்டி தள்ளுபடியுடன் மாதாந்திர தவணை கட்டுவதற்கு கால நீட்டிப்பு செய்யவும், வாகனங்களின் ஆவணங்களின் செல்லுபடியை நீட்டிக்கவும் நாங்கள் அரசிடம் கோரிக்கை-விடுத்துள்ளோம்.
ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டங்களில் எங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகத்திலும் எங்களின் கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளோம்.
போக்குவரத்துத் துறை 70 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது. மீண்டும் அத்துறை மீண்டெழ ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை ஆகலாம். 20 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ளதால், வீழ்ச்சியில் கிடக்கும் இந்தத் துறையைச் சரிவிலிருந்து மீட்பது அரசின் கடமையாகும்” என்றார்.
சரக்கு லாரி தொழிலாளர்களின் நிலை குறித்து ஏஐஎம்டிசி பொதுச்செயலாளர் நவீன் குப்தா கூறுகையில், “ஒரு லாரிக்கு சராசரியாக ரூ.60 ஆயிரம் வரை வாகன காப்பீடு (இன்சூரன்ஸ்) செலுத்த வேண்டும். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் கடும் நிதி நெருக்கடியில் தொழிலாளர்களும், வாகனங்களின் உரிமையாளர்களும் சிக்கித் தவிக்கின்றனர்.
பிப்ரவரி ஒன்றாம் தேதிமுதல் காலாவதியாகிவிட்ட வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'எப்போது வீடு திரும்புவோம்' - ஏக்கத்தில் வடமாநில லாரித் தொழிலாளர்கள்!