பல காலங்களாக சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட சமூகம் என்றால் அது திருநங்கை என்ற மூன்றாம் பாலினத்தவர்.
இவர்கள் அண்மைக்காலமாக பொதுத்தளத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளனர். மருத்துவர், நீதிபதி, செவிலி, காவலர்... என ஒவ்வொரு தளமாகத் தங்களது தடத்தை பதித்துவருகின்றனர்.
அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. பல காலம் தாங்கள் அனுபவித்த அவமானங்கள், தோல்விகள் எனப் பலவற்றால் பாதிக்கப்பட்டு விடியலை நோக்கி அவர்கள் எடுத்துவைத்த போராட்ட குணம், இடைவிடாத முயற்சி, மேலும் மனிதம் பேசும் பொது சமூகத்தில் உள்ள பலரது முனைப்பாலும் இது நடந்தேறியுள்ளது.
இருப்பினும் இன்னும் அவர்கள் பொது சமூகத்தில் முழுமையாக நுழையவில்லை. இந்தச் சூழலில்தான் உலக சமூகத்தையே கரோனா என்றொரு அரக்கன் சூறையாடிவருகிறான்.
இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் உலக வல்லரசுகள் விழிபிதுங்கி நிற்கின்றன.
இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளது. தன்னார்வலர்களும், பொதுமக்களும் எனப் பலதரப்பட்டோர் தங்களாலான சேவையை கரோனா தடுப்புக்கு எதிராக செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், பொது சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் கரோனா எதிரொலியால் உணவுப் பொருளின்றி தவித்துவருபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தின் குடிசைப் பகுதிகள், உணவு கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரிசி, மாவு, தேயிலை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை வழங்கியுள்ளனர்.
இது குறித்து மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த நிஷா கூறுகையில், "இந்த உணவுப் பொருள்களை நாங்களே தயாரித்து வழங்குகிறோம். இந்தப் பொருள்களை நவராத்திரி கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தாண்டு இந்த விழாக் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேறொரு நாளில் நவராத்திரியை கொண்டாடுவோம்" என்றார்.
நாடே ஊரடங்கில் உள்ள சூழலில் மூன்றாம் பாலினத்தவரின் உதவி பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது. அதன்படி பார்த்தால் இங்கு வென்றது பாலினம் அல்ல; மனிதமே! இவர்களது செயலைத் தற்போது அனைத்துத் தரப்பினரும் பாராட்டிவருகின்றனர்.
நாட்டில் இதுவரை கரோனாவால்...
- பாதிக்கப்பட்டோர் - 1,252
- குணமடைந்தோர் - 102
- உயிரிழந்தோர் - 33