கடந்த 2000ம் ஆண்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய நலச்சங்கத்தை புதுச்சேரி அரசு உருவாக்கியது. இந்நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி அதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்து தர வேண்டுமென தொழிலாளார் நலசங்கத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து புதுச்சேரி அரசு, நலவாரியம் அமைக்கப்படும் எனவும் இதன் மூலம் தொழிளாலர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உறுதியளித்தது ஆனால் இதுவரை நலவாரியம் அமைப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நலவாரியம் அமைக்கக்கோரி தொழிற்சங்கங்கள், புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வரும் 27ஆம் தேதி ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடையடைப்பு போராட்டம் தொடர்பாக புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் அனைத்து தொழிற்சங்களுடன் தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில், "அரசு சார்பில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், தொழிற்சங்கங்கள்ஆகியோர் பலர் பங்கேற்றனர். இதில் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொள்ள ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்கு மேல் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நலவாரியம் அமைக்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனஸ் ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன் இரண்டு தினங்களுக்குள் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு - தர்மபுரியில் கடையடைப்பு!