இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,691 சுற்றுலாத் தலங்கள் நாளை திறக்கப்படவுள்ளன. இதில், வழிபாட்டுத் தலங்கள், நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
முதற்கட்ட ஊரடங்கு தளர்வின்போது நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்களுடன் இணைந்த சுற்றுலாத்தலங்கள் என்ற வகையில் 820 சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், தற்போதைய ஆறாம் கட்ட ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வராத மீதமுள்ள சுற்றுலாத் தலங்கள் ஜூலை 6ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் தெரிவித்தார்.
அதன்படி, தாஜ்மஹால், டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நாளை முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொண்ட சுற்றுலாத் தலங்களின் நுழைவு வாயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை, சுகாதாரம் பேணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ள சுற்றுலாத் துறை, சுற்றுலாப் பயணிகள் எந்நேரமும் முகக்கவசம் அணிந்து தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கட்டணங்கள் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சீசன் காலங்களில் ஒரே நாளில் 80 ஆயிரம் பேர் பார்வையிடும் தாஜ்மஹாலில், நாளை முதல் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் இரு பிரிவுகளாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றுலாத் துறை கூறியுள்ளது
மேலும், தாஜ்மஹாலில் உள்ள பளிங்கு கற்களை சுற்றுலாப் பயணிகள் தொடக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது, வெளியில் இருந்து உணவுகள் எடுத்துவரக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'சீன விவகாரத்தில் மத்திய அரசை பாஜக தலைவர்கள் விமர்சிக்கிறார்கள்' - குலாம் நபி ஆசாத்