புதுச்சேரி மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (பிஆர்டிசி) ஊழியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. இதற்கான கோப்புகளை அவர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தனர். இருந்தபோதிலும், சம்பளம் வழங்குவது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.
ஆனால், துணைநிலை ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 10 பிஆர்டிசி ஊழியர்களுக்கு மட்டும் மாதச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பிஆர்டிசி அனைத்து ஊழியர்களுக்கும் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி சுற்றுலா வளர்ச்சிக் கழக ஊழியர்கள், உப்பளம் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.
சங்கத் தலைவர் ஆதிகேசவன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சங்க ஊழியர்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு, தகுந்த இடைவெளியுடன் கையில் தட்டை ஏந்திக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், சம்பளம் வழங்குவதில் பாரபட்சம் பார்க்கும் துணைநிலை ஆளுநரைக் கண்டித்து ஆளுநர் அம்மா, தாயே சம்பளம் போடுங்கள் எனப் பிச்சைக் கேட்பதுபோல் முழக்கமிட்டனர்.
இன்றைக்குள் சம்பளம் வழங்கவில்லை என்றால் நாளை குடும்பத்துடன் தாங்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாதாந்திர சம்பளம் வழங்காததால் நகராட்சி ஊழியர்கள் போராட்டம்!