ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்று (ஆக.12) பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், கம்ரசிபூரா என்ற பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான அசாத் லஹாரி ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை மூத்த அதிகாரி கூறுகையில், உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின்படி இந்திய ராணுவமும், ஜம்மு-காஷ்மீர் காவல் துறையும் புல்வாமாவின் கம்ராசிபூரா பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடைபெற்ற மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட அசாத் லஹாரி, கடந்த மே மாதம் ஜம்மு-காஷ்மீர் காவலர் ஒருவரின் படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், கிரெனெடுகள், வெடி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சுதந்திர தினம்: ஜம்முவில் அதி விரைவுக் குழுவை பயன்படுத்தும் காவல்துறை