புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரிக்கு தேர்தல் ஆணைய உயர்மட்ட குழுவினர் நாளை (டிசம்பர் 22) வருகைதர உள்ளனர்.
சட்டபேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகள் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையம் உயர்மட்ட குழுவினர் நாளை டிசம்பர் 22ஆம் தேதி புதுச்சேரி வருகின்றனர்.
புதுச்சேரி வரும் இந்திய தலைமைத் தேர்தல் குழுவினர் தலைமைச் செயலர் அஸ்வின்குமார், புதுச்சேரி டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா, தலைமை தேர்தல் அலுவலர் சுர்பீர்சிங், மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் ஆகியோருடன் தனியார் ஓட்டலில் தனித் தனியாக நாளை மாலை ஆலோசனை நடத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து காவல் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.
அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பது குறித்து கட்சியினருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைப் புதுச்சேரி தேர்தல் துறை செய்துவருகிறது.