திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் சங்கர் (22) என்பவர் பழனியைச் சேர்ந்த கௌசல்யா (19) என்பவரை 2015ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார். அதனால் கௌசல்யாவின் பெற்றோர் இருவருக்கும் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்தனர்.
இதையடுத்து 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையத்தில் இருவரையும் ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் சங்கர் உயிரிழந்த நிலையில், இந்த படுகொலை தொடர்பாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, செல்வக்குமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மணிகண்டன், தன்ராஜ், பிரசன்னா ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிந்து கைதுசெய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு தூக்குதண்டனை வழங்கி 2017ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்தது. மேலும் மீதமுள்ள 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
பிராதன குற்றவாளியான சின்னசாமியை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு தற்போது முடிவுசெய்துள்ளது.
இதையும் படிங்க: சுஷாந்த் மரணத்தை வைத்து பிகார் தேர்தலில் அரசியல் செய்யும் பாஜக - காங்கிரஸ் தாக்கு