புகையிலை, மது உள்ளிட்ட போதை பொருட்கள் உடலுக்கு தீங்கானது என வலியுறுத்தி பல்வேறு வகையில் பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் போதைப் பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்பேரணியில் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதை எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் இருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலாவந்தது.
முன்னதாக இதற்கான தொடக்க நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.