புதுச்சேரி நேரு வீதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அதில் நிரந்தர வைப்பு முதலீடு திட்டத்தில் 800-க்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு நிதியாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், 2017ஆம் ஆண்டு முதிர்வு காலம் முடிந்ததும் பணத்தை திருப்பி கேட்டபோது, பணம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, நிதி நிறுவனத்தின் புதுச்சேரி கிளையை அங்கிருந்து காலி செய்யப்படுள்ளது.
இதன் பின்னர், பணம் கட்டி பாதிக்கப்பட்டோர் புதுச்சேரி குற்றம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, வேலூரில் தலைமையிடமாக செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தின் தலைவர் தியாகராஜனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்த தனியார் நிதி நிறுவனத்தால், சுமார் 4 கோடி ரூபாய்க்கும் மேல் சிறுசேமிப்பு திட்டம், மாத வைப்பு திட்டம் மற்றும் ஐந்து வருட நிரந்தர வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.