புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகரில் உள்ள பத்தாம் எண் வாக்குச்சாவடியில் மக்களவைத் தேர்தலுக்கான மறுவாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின்போது புதுச்சேரியைச் சேர்ந்த இந்த வாக்குச்சாவடியில், மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான இன்று காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகரின் பத்தாம் எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு காலை ஏழு தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் 473 ஆண் வாக்காளர்களும், 479 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 952 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்பட உள்ளது. மேலும் வாக்குப்பதிவு மையத்தைச் சுற்றிலும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.