புதுச்சேரி காந்தி வீதியில் பெத்தி செமினார் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு 8ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் அபினேஷ், அந்த வகுப்பு தலைவராக உள்ளார். இந்நிலையில், சரியான முறையில் முடிதிருத்தம் செய்யாத மாணவர்களின் பெயர் பட்டியலை எழுதி வருமாறு அபினேஷிடம், உடற்பயிற்சி ஆசிரியர் மோட்சா கேட்டுள்ளார்.
அதன்பின், அபினேஷ் அளித்த பெயர் பட்டியலில் ஆசிரியர் மோட்சாவிற்கு வேண்டப்பட்ட மாணவனின் பெயர் இடம் பெற்றதால் ஆத்திரமடைந்த ஆசிரியர், மாணவன் அபினேஷை அடித்துள்ளார்.
இதனால் மயக்கமடைந்த அபினேஷ், மற்றொரு ஆசிரியர் உதவியின் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்த பிறகு அபினேஷை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.