புதுச்சேரி சட்டசபையின் 14ஆவது கூட்டத்தொடரின் பட்ஜெட் விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி பிரச்னைகள் பற்றி சபையில் விவாதிக்கும் போது, அதில் மக்களுக்கு வேண்டிய அடிப்படை திட்டத்தை, அமைச்சர்கள் முன்னிலையில் கேள்விகளாக வைக்கும் நேரத்தில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை அரசு செயலாளர்கள் மாநில மொழி தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இதில் தலைமைச் செயலாளர், துறை ரீதியாக உள்ள செயலாளர்கள் தமிழ் மொழி தெரியாத நிலையில் உள்ளதால், தற்போது சட்டசபையில் மக்கள் பிரச்னையைப் பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கும் போது, அமைச்சர்கள் கூறும் பதில்களை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு புதுச்சேரிக்கு தமிழ் மொழி தெரிந்த செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் மத்தியில் உள்ள பிரச்னைகள் உடனடியாக ஆய்வு செய்து முடிக்க முடியும்'என்றும் தெரிவித்தார்.