முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் உள்ள தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டும் பணிகளில் ஈடுபட்டது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்டுவதற்கு தடையில்லை என உத்தரவிட்டு தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதற்கிடையே இந்த மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கே.எம்.ஜோசப், தான் கேரளாவை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.
இதனையடுத்து இதுதொடர்பான வழக்கு விசாரணை நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை அருகே வாகன நிறுத்தம் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது தொடர்பான புதிய புகைப்பட ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்தது.