மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே கடும் அதிகாரப் பனிப்போர் நடந்துவருகிறது.
ஆளுநர் ஜகதீப் தங்கர் மேற்கு வங்க அரசுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகளை விடுப்பது, ஆட்சி நிர்வாகத்தை விமர்சித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.
இதனிடையே, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது டெல்லி இல்லத்தில் ஆளுநர் தங்கர் சந்தித்து மேற்கு வங்க மாநில விவகாரங்கள் குறித்து விவாதித்தாக அறிய முடிகிறது.
இந்த திடீர் சந்திப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான கல்யாண் பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், "மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர் பாஜகவின் ஒலிபெருக்கியைப் போல செயல்படுகிறார். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதனை ஒலிபரப்புகிறார்.
அவர் உள்துறை அமைச்சரை சந்திக்க சென்றாரா அல்லது தனது மேலிடமான பாஜக தலைவர்களை சந்திக்க சென்றாரா? என எனக்கு தெரியாது. இதுவரை அவர் அதை தான் 99 முறை செய்துள்ளார். எனவே, இப்போது அவர் மீண்டும் அந்த வேலையை செய்திருந்தால் இது அவருக்கு 100ஆவது முறையாகும்.
தனது பொய்யான அவதூறுகள் எனும் குப்பைகளுடன் தொடர்ந்து டெல்லிக்கு செல்லும் அவரை மேற்கு வங்க ராஜ்பவனுக்கு ஏற்பட்ட அவமானம் என்றே அழைக்க முடியும்.
மேற்கு வங்கம் முழுவதும், பண்டிகை நிகழ்வு அமைதியாக நடைபெற்றது. திருவிழாவின் மகிழ்ச்சியில் வங்கத்தில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். இந்த நேரத்தில் அவரை பற்றி மேலும் பேச நான் விரும்பவில்லை" என கூறினார்.