மலப்புரம்: பயணிகள் நடைமேடையை தோட்டம் போல் மாற்றியதற்கு திரூர் ரயில் நிலைய நிர்வாகத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
திரூர் ரயில் நிலையத்துக்கு யார் சென்றாலும், ஒரு தோட்டத்தில் நிற்பதைப் போன்ற உணர்வைப் பெறுவார்கள். கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையத்தை அதன் அலுவலர்கள் அழகுபடுத்தியுள்ளனர்.
இந்த ரயில் நிலையத்தின் 3 நடைமேடைகளின் இருபுறமும், மூலிகை செடிகள், பூத்துக் குலுங்கும் பூச்செடிகள் உள்ளிட்டவை மண் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு எந்தவித இடையூறுமின்றி இவை அனைத்தும் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு ரயில்வே அமைச்சகம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தின் புகைப்படத்தை தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரயில்வே அமைச்சகம், ரயில் நிலையம் அழகானது. தென்னக ரயில்வேயின் திரூர் ரயில் நிலையத்தை பாருங்கள், இங்கு மண் தொட்டிகளில் செடிகள் வைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்துக்கு புரட்சிகர வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1921ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அராஜகத்தை எதிர்த்து மலப்புரம் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து போராடத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தில் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்ட 100 கிளர்ச்சியாளர்கள் இங்கிருந்துதான் பெல்லாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திரும்பிவரும் வழியில் அவர்கள் காற்று நுழைய முடியாத ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டனர். இதில் 64 கிளர்ச்சியாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.