ஜெய்ப்பூர்: பெருமளவில் பயனர்களைக் கொண்ட சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக போலியான செயலிகளை ஹேக்கர்கள் உருவாக்கி பயனர்களின் தனியுரிமை தகவல்களைத் திருடிவருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் செயலிக்கு டிக்டாக் ப்ரோ என்று பெயரிட்டு வெளியிட்டுள்ள ஹேக்கர்கள், குறுந்தகவல், வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் கைபேசிகளுக்கு இணைப்புகளை அனுப்பி தரவிறக்கம் செய்யத் துண்டுகின்றனர்.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தப் போலி செயலி அனுமதிக்கப்படவில்லை என்பதால், மூன்றாம் தர தளத்தில் பதிக்கப்பட்ட ஏபிகே (APK) என்னும் மென்பொருள் கோப்புகளைக் கொண்டு பயனர்கள் இந்த டிக்டாக் ப்ரோ செயலியை தரவிறக்கம் செய்ய, அதனை வடிவமைத்த ஹேக்கர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்தச் செயலியானது அசல் டிக்டாக்கை ஒத்த ஒரு ஐகானை கொண்டிருப்பதால் சிலர் இதை நம்பி தரவிறக்கம் செய்துள்ளார்கள். இதனைத் தரவிறக்கம் செய்த பின், பயனர்கள் செயலியைப் பயன்படுத்த உள்நுழையும்போது, செயலியானது பயனர்களின் தனியுரிமைகளைக் காணும் அனுமதிகளைக் கோருகிறது. இதன்மூலம் எளிதில் புகைப்படங்கள், குறுந்தகவல்கள் என அனைத்தையும் ஹேக்கர்கள் திருட முடியும்.
![TikTok](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7992629_dfs.jpg)
சீனாவின் ’பைட் டான்ஸ்’ நிறுவனத்தின் சிறு காணொலிகளைப் பதிவேற்றும் செயலியான டிக்டாக், உலகளவில் 800 மில்லியன் பயனர்களைத் தன்வசம் கவர்ந்து வைத்திருந்தது. இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருந்தது. இந்திய-சீன எல்லைப் பிரச்னை, பயனர்களின் தனியுரிமை தகவல் திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளால் இந்தச் செயலி சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட இதே அம்சங்களை கொண்ட செயலிகளான சிங்காரி, ரோபோசோ, ஷேர்சாட் ஆகியன பிரபலமடையத் தொடங்கின. சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ள பேஸ்புக் நிறுவனமும் டிக்டாக்கிற்கு மாற்றான செயலியை வெளியிட முனைப்பில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆப்பிள் ஐஓஎஸ் 14: சிறப்பம்சங்கள் என்னென்ன?